ஆத்தும நேசரின் அங்க மகத்துவம்

ஆத்துமநேசரின் அங்க மகத்துவம்-01

 

ஆத்துமநேசரின் அங்க மகத்துவம்

 

தியானம் 1

 

ஆத்தும நேசரின் பாதம் (1ஆம் பங்கு)

 

வேதம்

1.       உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். (லூக்கா 4:11)

2.       சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.  (மத்தேயு 15:30)

3.       பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரம் தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு பயந்தார்கள். (லூக்கா 8:35)

4.       மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். (லூக்கா 10:39)

 

போதனை

            மேலே காட்டிய வேத வசனங்களைக்கொண்டு நாம் இரட்சகரின் பாதத்தை நோக்கும் போது, மூன்று விசேஷித்த குறிப்புகள் வெளியாகின்றன.

1.       கிறிஸ்துவின் பாதத்துக்குக் கல்லும் பஞ்சுபோன்றதுதான். இது உண்மையென்று நிலைநாட்ட வேத சாட்சியாவது தூதர் சாட்சியாவது அவசியமில்லை; சாத்தானே இப்படி அறிக்கையிடுகிறான். பிசாசு கிறிஸ்துவை வனத்தில் சோதித்தபோது, உமது பாதம் கல்லில் இடறாது (சங்கீதம் 91:12) என்பதாகப் பக்தருக்குச் சொல்லப்பட்ட வாசகம் இரட்சகருக்கே செல்லும் என்று அறிக்கையிடுகிறான். இரட்சகரின் பாதம் கல்லில் இடறாதானால், அவருடைய பாதங்களுக்குக் கல்லும் பஞ்சுபோன்றது தானே.

2.       இயேசுவின் பாதம் பிணியாளிகளின் வைத்தியசாலை. இயேசுவின் காலத்தில் ஒரே ஒரு வைத்தியசாலை மாத்திரம் இருந்ததாக வாசிக்கிறோம். அது (யோவான் 5:2) ஐந்து மண்டபங்கள் உள்ளதாய், பெதஸ்தாக் குளத்தோரத்தில் இருந்தது. அக்குளத்தில் அற்புதங்கள் நடவாவிட்டால் அந்த மண்டபமும் இராது. இயேசுவின் பாதம் ஒரு பெரிய வைத்தியசாலையாயிருப்பதால் வேறு கட்டடம் அவசியமில்லை. இவ்வுலகத்தில் தொத்து வியாதிகளையிட்டு, பல வைத்தியசாலைகளைக் கட்டுகிறார்கள். இயேசுவின் பாத வைத்தியசாலையில் வியாதிகள் தொத்தினதில்லை. 'சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர்' முதலிய அநேக நோயாளிகள் ஒன்றாகக் கூடி அவர் பாதத்தில் கிடந்தார்கள்; அவர்களை அவர் சுகமாக்கினார். மேலும் லோக வைத்தியசாலைகளிலிருக்கும் பிண அறை இயேசுவின் பாத வைத்தியசாலையில் இல்லவே இல்லை; எல்லாரும் சுகமானார்கள்.

3.       இயேசுவின் பாதம் பிணி நீங்கினவர்களின் பள்ளிக்கூடம். பிசாசுகள் நீங்கின மனுஷனும், மரியாளும் அவருடைய, பாதத்தையே பள்ளிக்கூடமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாவ நோயால் வருத்தப்பட்டு, பாவ பாரத்தால் நொந்து 'போனவர்களுக்குப் பாவமன்னிப்பாகிய இளைப்பாறுதலை இயேசு கொடுக்கிறது மாத்திரமல்ல; (மத்தேயு 11:29) சாந்தமாயும், மனத் தாழ்மையாயுமிருக்கிற என்னிடத்தில் வந்து ஞான மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் அழைக்கிறார்.

தியானம்

            ஆத்துமாவே! இம்மட்டும் நீ (ஏசாயா 55:2) அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உன் பிரயாசத்தையும் செலவழிக்கிறவனைப் போலிருந்தாய்; இப்பொழுதோ இயேசுவின் பாதத்தைக் கண்டு தியானிக்கப் போகிறாய்; இன்றுமுதல் உனக்கு வாழ்வும் பாக்கியமும் துவங்கிற்று என்று அறிந்துகொள்.

            ஆத்துமாவே! (ஏசாயா 19:1) மேகங்களைத் தமது இரதமாக்கி, (சங்கீதம் 18:10) காற்றின் செட்டைகளில் பறக்கிறவருக்குக் கல் பஞ்சாகிறது. அதிசயமோ? அதிசயமல்ல. என் ஆத்துமாவின் பாதங்களோ பொருளாசை என்னும் முட்களாலும், பெருமை அகங்காரம் என்னும் கற்களாலும், அடிக்கடி காயப்பட்டிருக்கின்றன; துன்பங்களும், வியாகுலங்களும் என் ஆத்துமாவின் பாதங்களைக் கொப்புளம் ஆக்கிவிடுகின்றன. இன்று நான் கல்லும் பஞ்சாக இருக்கும் கனம்பொருந்திய பாதமடைந்தேன். அவர் பொற்பாதத்தின் துணையால் என் ஆத்தும பாதங்களை இனி ஒன்றும் சேதப்படுத்தமாட்டாது. இரட்சண்ய பாதையில் என் பாவங்கள் சருக்காமல்போம்; ஏனெனில் கல்லும் பஞ்சாய்ப்போகும். பரிசுத்த பாதம் எனக்கு முன்சென்று. சகல இடர்களையும், ஆவிக்குரிய மோசங்களையும் ஒதுக்கி விட்டு, என் பாதங்களைச் சமாதானத்தின் வழியிலே வைக்கும்.

            ஆத்துமாவே! இதிலும் அதிகமாய் என் இரட்சகரின் பாதம் எனக்கு நல்ல வைத்தியசாலையாயிருக்கிறது. இனி நான் ஏன் என் பாவநோய் தீரும்படியாக 'எங்கே ஓடுவேன் பாதகனானேன்' என்று புலம்பித் திரிய வேண்டும்? பாவநாச ராய் வந்தவர் பாதத்தில் சரீரப்பிரகாரமான சப்பாணிக்கும், குருடனுக்கும், ஊனனுக்கும், ஊமையனுக்கும் கிடைத்தபோது எனக்கேன் கிடையாது? கிடைக்கும் என்பது மெய். நன்மை செய்ய இயலாத ஆத்தும சப்பாணிக்கு இதோ, நன்மை செய்ய ஆசையும் தீர்மானமும் எழும்பு கின்றன. ஆத்தும நேசரைக் காணாமலிருந்த கண்ணுக்குத் தெளிவு பிறக்கிறது. ஆத்துமாவின் சத்துவங்கள் முறிந்து போய், பாவப் புழுதியில் புரண்டு உருண்டு கிடந்த ஊனனாகிய எனக்கு, அந்தப் பொற்பாதத்திலிருந்து புறப்படும் தைலம் புது அவயங்களைத் தருகிறது. பாவமன்னிப்பின் சந்தோஷ கீதங்கள் ஒருநாளும் எழும்பாத என் ஊமை ஆத்துமாவின் உதடுகள் துதியின் கீதம்பாட இதோ துடிக்கிறது. இந்த அருள் பாதத்தைவிட்டால் மெத்த மோசம். என் ஆத்தும நோய்களைத் தீர்த்துவிடுகிற ஐயன் பாதத்தை, எப்படி விட்டுப்பிரிவேன் (ரோமர் 8:36-39) உபத்திரவங்களே! வியாகுலங்களே! துன்பங்களே! நாசமோசங்களே! பட்டயங்களே! அதிகாரங்களே! வல்லமைகளே! , பசியே! நிர்வாணமே! மரணமே ஜீவனே! உயர்வே! தாழ்வே! உங்களில் எவர்களானாலும் நீங்கள் எல்லாரும் ஏகமாயானாலும் என் இயேசுவின் பாதத்திலிருந்து என்னைப் பிரிக்கமுடியாது.

            என் ஆத்துமா இயேசுவின் பாதத்திலிருந்து பெற்றுக் கொண்ட நன்மைக்காக அதை அவர் பாதத்திலேயே வைத்து வைப்பேன். அது என் வைத்தியசாலையாய் மாத்திரமல்ல, பள்ளிக்கூடமாயுமிருக்கிறது. பரி. பவுலுக்குக் கமாலியேலின் பாதம் பள்ளிக்கூடமாயிருந்தது; நானோ இயேசுவின் பாத பள்ளிக்கூடத்தில் சேர்ந்துகொண்டேன். அன்பு, சந்தோஷம், சமாதானம், தாழ்மை, நீடிய சாந்தம், தயவு, உண்மை, பொறுமை, இச்சையடக்கம், இச்சையடக்கம், லோகத்தை வெறுத்தல், பரத்தை நோக்குதல் முதலிய ஞானசாஸ்திரங்களையும், பிசாசு, பாவம், உலகம் என்னும் பலத்த சத்துருக்களை ஜெயிப்பதற்கேற்ற யுத்த சாஸ்திரத்தையும் ஆயுத பரீட்சையையும் அங்கே படிப்பேனாக.

 

விசுவாச வணக்கம்

கல்லும் பஞ்சாகும் கனமுள்ள பாதமே! நமஸ்காரம்.

பிணியாளிகளின் வைத்திய சாலையே! நமஸ்காரம்.

பிணிதீர்ந்தோர் பள்ளிக்கூடமே! நமஸ்காரம்.

 

ஜெபம்

            உமது பரிசுத்த என் இரட்சகராகிய இயேசுநாதரே! இதோ நீர் சிலுவையில் தொங்குகிறவராய் எனக்கு விளங்குகிறீர்; பாதங்களை ஆராய்ந்து தியானிக்க அருள் புரிந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.

            தயவுள்ள இயேசுவே! என் ஆத்துமாவின் பாதங்கள் பாவ வழிகளில் செல்லாதபடி கிருபை செய்யும். என் முந்தின பாவங்களையெல்லாம் உமது பாதத்தில் படைக்கிறேன்; இதைவிட என் ஆத்தும பூமியில் விளைந்த பலன் வேறொன்றுமில்லை, இனிப் பாவஞ்செய்யாத படி பலம் கிடைக்க உமது பாதத்தைக்கொண்டு என்னைத் தொடும். என் ஆத்தும வாழ்வுக்கேற்ற சகல அறிவையும் அடைந்து உம்மை மகிமைப்படுத்தும்படி உமது பரிசுத்த ஆவியைக்கொண்டு, எனக்குப் படிப்பித்தருளும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே. ஆமென்.

 

          பரமண்டலங்களிலிருக்கிற...

 

துதி

            பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக; ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Comments

Popular posts from this blog

Tamil Christian Songs

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

இயேசு என்ற திருநாமத்திற்கு