வரலாற்று-கிறித்தவக் கீர்த்தனைகள் கன்னியாகுமரி

வரலாற்று-கிறித்தவக் கீர்த்தனைகள் கன்னியாகுமரி மாவட்டம் புத்தகம்

வரலாற்று நோக்கில் கிறித்தவக் கீர்த்தனைகள்

            சீர்திருத்தச் சபை (Protestant Church) தோன்றக் காரணமான மார்ட்டின் லூதர் (1483-1546), ஜோகான் வால்டர் ஆகிய இருவரும், ஆலயத் தொழுகைகளில் பாடித் தேவனை மகிமைப்படுத்தப் புதிய பாடல்களை எழுதி, இசையமத்தினர்.  அப்பாடல்களைத் தொகத்து 1524-இல் வெளியிட்டனர்.  முதலில் ஜெர்மன் மொழியில் வெளியான இப்பாடல்களே ஞானப்பாட்டுகள் (Hymns) என அழைக்கப்பட்டன.

            ஜெர்மன் நாட்டவரான சீகன்பால்கு ஐயர் இயேசு கிறிஸ்துவின் அருட்தொண்டராய் 1706ஆம் ஆண்டு தமிழ் நாட்டிற்கு வந்தார்.  தமிழ் நாட்டின் தரங்கம் பாடியில் தமிழ் மொழியினைத் தெளிவுறக் கற்றுக் திறம்பட பாடல்களை இயற்றும் ஆற்றல் பெற்றார்.  முறைப்படி தாம் இயற்றிய பாடல்களோடு, ஜெர்மானிய மொழிப் பாடல்களையும் மொழிபெயர்த்து "Book of Hymns set to Malabaric Music" என்னும் பாடல் புத்தகத்தினை 1713 ஆம் ஆண்டு வெளியிட்டார்.  இதுவே சீர்த்திருத்த கிறிஸ்தவச் சபையாரின் முதல் ஞானப் பாடல் புத்தகம்.

            தொடர்ந்து நம் நாட்டிற்கு வந்த இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேலை நாட்டு அருள் தொண்டர்களான சூல்சே, வால்டர், பிரேசின் மற்றும் பெப்ரிசியஸ் ஆகியோர் சீகன் பால்கு ஐயர் வெளியிட்ட புத்தகத்தில் மேலும் பாடல்களை இணைத்து பதிப்புகள் பல வெளியிட்டனர்.  பெப்ரீஸியஸ் ஐயர் அவர்களால் தொகுத்து 1774 இல் சென்னையில் வெளியிடப்பட்ட ஞானப்பாட்டுப் புத்தகம் பல்வேறு கால கட்டங்களில் திருத்தங்களுடன் ஒன்பது முறை வெளியிடப்பட்டுள்ளது.

 

கீர்த்தனைப் பாடல்கள்:

          சீகன்பால்கு ஐயர் தமிழிசையினில் (Carnatic Music) ஆர்வம் கொண்டு கிரின்ட்லர் ஐயர் அவர்களின் துணையுடன் 41 பாடல்கள் இயற்றி 1713இல் பாட்டுப் புத்தகமாக வெளியிட்டார்.  இக் கிறிஸ்தவத் தமிழ்க் கீர்த்தனைத் தொகுப்பே கிறிஸ்தவக் கீர்த்தனைப் பாடல்களுக்கு அடிப்படையாய் அமைந்தது.

            கிறிஸ்தவத் தமிழ்க் கீர்த்தனைகளை அதன் முறைப்படி எழுதியவர்களுள் மிகவும் முக்கியமானவர் வேதநாயக சாஸ்திரியார் ஆகும்.  நம் நாட்டுக் கவிஞர்களால் நம் மண்ணின் ராக, தாளங்களைக் கொண்டு நம் வாழ்வியல் மரபுப் பின்னணியில் இத்தகு கீர்த்தனைகள் படைக்கப்பட்டதால், மக்களிடம் இவை இயல்பாகவே இணைந்துவிட்டன. 

            வேதநாயக சாஸ்திரியாரின் கீர்த்தனை இயற்றும் திறனையறிந்து அவரை வெப் ஐயரவர்கள் நேரில் சந்தித்தார்.  அவரது கீர்த்தனைப் பாடல்களைச் சபைகளில் அறிமுகப்படுத்தினார்.  வெப் ஐயர் அவர்கள் எழுதிய பாடல்களும் நம் பாட்டுப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.  இப்பெரியார் 1853இல் “ஞானக்கீதங்கள்” என்னும் பாடல் நூலைத் தொகுத்து வெளியிட்டார்.  1870இல் G.T. வாஷ்பர்ண் ஐயர் அவர்கள் நம் நாட்டின் கிறிஸ்தவக் கவிஞர்கள் பலரின் பாடல்களை இணைத்து இப்பாடல் நூலை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டார்.  இந்நூலில் 300 கீர்த்தனைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

            1901ஆம் ஆண்டு J.S. சாண்ட்லர் ஐயர் அவர்கள் 373 பாடல்களுடன் இதன் மூன்றாம் பதிப்பினை வெளியிட்டார்கள்.  இப்புத்தகத்தில் வேதநாயக சாஸ்திரியாருக்கு அடுத்தப்படியாக குமரி மாவட்டம் மயிலாடியினைச் சார்ந்த ஜாண் பால்மர் அவர்களின் பாடல்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

            1926ஆம் ஆண்டில் H.A. பாப்லி ஐயர் தலைமையில் செயல்பட்ட வல்லுநர் குழு ஒன்று இதன் நான்காம் பதிப்பை வெளியிட்டது.  1947ல் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (C.L.S.) அனைத்துத் திருச்சபைகளிலும் பாடத்தகுந்த வகையில் H.A. பாப்லி ஐயர் அவர்கள் தலைமையில் பல்வேறு திருச்சபைகளைச் சார்ந்த வல்லுநர்களைக் குழுவாக அமைத்துப் பாடல்களைத் தொகுத்தனர்.  இக்குழுவில் குமரி மாவட்டம் சேனம் விளையைச் சார்ந்த ஞானாபரணம் பண்டிதர் இடம் பெற்றிருந்தார்.  இப்பாடல் புத்தகம் ஐந்தாம் பதிப்பாக 1950-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 

ஞானப் பாடல்களும், கீர்த்தனைகளும்:

            கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தால் (C.L.S.) J.S. சாண்டலர் ஐயர் அவர்கள் தலைமையில் அறுவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.  இக்குழு வழக்கத்திலிருந்த ஞானப் பாடல்களையும், கீர்த்தனைப் பாடல்களையும் தொகத்து “ஞானப்பாட்டுகள் ஞானக் கீதங்கள்” எனும் பெயரில் தொகுப்பு ஒன்றினை 1924இல் வெளியிட்டது.  இப்புத்தகத்தில் 322 ஞானப்பாடல்களும் 373 கீர்த்தனைப் பாடல்களும் இடம் பெற்றன.  இதே குழுவினரால் இதன் இரண்டாம் தொகுப்பு 1935ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

            தென்னிந்தியத் திருச்சபை உருவான பின் அருள்திரு. J.E. கேசரி அவர்கள் தலைமையில் இப்புத்தகம் “ஞானப் பாட்டுகளும், ஞானக் கீர்த்தனைகளும்” என்னும் பெயரில் 1951இல் வெளியிடப்பட்டது.  நமது கன்னியாகுமரிப் பேராயம் உருவான பின்னர் நம் முதற் பேராயரான பேரருட்திரு. I.R.H. ஞானதாசன் அவர்கள் முயற்சியில், அருள்திரு. V.D. சகாயம் அவர்கள் தலைமையில் அமைந்த இலக்கியக் குழுவால் “ஞானப்பாட்டுகளும் கீர்த்தனைகளும்” எனும் பெயரில் 1964இல் பாடற் புத்தகம் வெளியிடப்பட்டது.  1967ஆம் ஆண்டு அருள்திரு. R. எட்வர்ட் சேம் அவர்கள் தலைமையில் அமைந்த குழுவும் இப்பாடல் புத்தகத்தின் புதிய பதிப்பொன்றை வெளியிட்டது.

            பேராயர் பேரருள் திரு. C. செல்வமணி அவர்கள் காலத்தில் அப்போதைய இலக்கியக் குழுக் கன்வீனரான J.J.R. சிசில் அவர்கள் தலைமையில் அமைந்த குழு தக்க மாற்றங்களுடன் 1978இல் திருத்திய பதிப்பினை வெளியிட்டது.  இப்புத்தகத்தில் 360 ஞானப்பாடல்களும் 411 கீர்த்தனைப் பாடல்களும் இடம்பெற்றன.  இத்துடன் நற்கருணை கீர்த்தனைப் பாடல்களும் இடம் பெற்றன.  இத்துடன் நற்கருணை தொழுகை முறை நூலும் பின்னிணைப்பாய் சேர்க்கப்பட்டது. இதன் பின் பேராயர் பேரருள் திரு. G. கிறிஸ்துதாஸ் அவர்கள் காலத்திலும் பேராயர் பேரருள் திரு. M.I. கேசரி அவர்கள் காலத்திலும் இதன் ஒன்பது பதிப்புகள் முறையே 1982, 1985, 1987, 1988, 1989, 1991, 1993, 1995, 1997ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.

            நமது ஞானப்பாட்டு கீர்த்தனைப் பாடல் நூலில் திருத்தங்களும் இணைப்புகளும் மிகத் தேவை என்பதை உணர்ந்த நம் பேராயர் பேரருள் திரு. G. தேவகடாட்சம் M.A., B.D., M.Th. அவர்கள் ஒரு திருத்திய புதிய பதிப்பினை வெளியிட விரும்பி அதற்கான குழுவினையும் அமைத்தனர்.  இக்குழுவில் இசையிலும் மொழியிலும் தேர்ச்சி பெற்ற அன்பர் பலர் இடம் பெற்றனர்.  இக்குழுவினர் ஒன்றரை ஆண்டுகள் அயராது உழைத்து இத்திருத்திய பதிப்பினைப் புதிய இணைப்புகளுடன் தொகுத்துள்ளனர். 

இத் தொகுப்பில்:

1.       முந்திய பதிப்புகளில் இருந்தும் இடையே வந்த பதிப்புகளில் விடப்பட்ட கருத்து நிறைந்த பாடல்கள் திரும்பவும் சேர்க்கப்பட்டுள்ளன.

2.       ஞானப் பாட்டுகளுக்குப் பொருத்தமான ராகங்கள் தெரிவு செய்யப்பட்டு குறிக்கப்பட்டுள்ளன.

3.       ஆங்கிலத்தில் மட்டும் விரும்பிப் பாடப்பட்டு வந்த ஞானப்பாட்டுகள் சில தமிழில் மொழிபெயர்த்து இணைக்கப்பட்டுள்ளன.

4.       இதர பாடல் புத்தகங்களிலிருந்தும் பொருள் மிகுந்த பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன.

5.       கீர்த்தனைப் பாடல்களின் கடினமான சொற்களுக்கு ஏற்ற பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

6.       பாடலாசிரியர் பெயர்கள் பாடல்களின் கீழ் முழுமையாகத் தரப்பட்டுள்ளன.  மேலும் அவர்கள் பெயர்களும் சொந்த ஊர்களும் தனியட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

7.       அண்மைக் காலம் வரையிலும் பாடப்பட்டு இன்றும் நம் நினைவில் நிற்கும் எழுப்புதல் பாடல்களும் தொகுக்கப்பட்டு தனிப்பிரிவாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன.

8.       பேராயக் கீதமாகத் தெரிவு செய்யப்பட்டபாடலும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

Tamil Christian Songs

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

இயேசு என்ற திருநாமத்திற்கு